ராமநாதபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள், இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர்-07ம் தேதி கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, திருப்புல்லாணி, பரமக்குடி, ஏர்வாடி, தேவிப்பட்டிணம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்களம் உள்ளிட்ட பல பகுதிகளில் செப்டம்பர் 8 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய நாட்களில் ஊர்வலமும், 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு இந்து அமைப்புகள் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ராமேசுவரத்தில் திட்டக்குடி சந்திப்பு, பெரியகடை வீதி, ராமகிருஷ்ணபுரம், சேரான் கோட்டை, எம்.ஆர்.டி.நகர், இந்திரா நகர், சிவகாமி நகர் உள்ளிட்ட 30 இடங்களில் பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. முன்னதாக, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, ரசாயன கலவை இல்லாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும்.

விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை வைக்கக் கூடாது. மதவெறி தூண்டும் வகையில், பிற மதத்தினரின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்புவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது.

விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், ஊர்வலம் செல்லும் இடங்கள், கரைக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. மினி லாரி மற்றும் டிராக்டர்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். மாட்டு வண்டி, 3 சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக் கூடாது.

ஒலிபெருக்கி வைப்பதற்கு காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். எங்கிருந்து மின்சாரம் பெறப்படுகிறது என்பதை கடிதம் மூலம் மின்சார வாரியத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். பொது இடங்களில் சிலை வைக்க உள்ளாட்சி அமைப்பு அனுமதி அவசியம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.