மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் மூன்று மற்றும் நான்கு வயதே நிரம்பிய 2 பள்ளிச் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், “இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதில் காவல் துறை மெத்தனமாக நடந்துள்ளது. சிறுமிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் ஏற்புடையது அல்ல” என்று கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பாலியல் துன்புறுத்தலை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. குழந்தைகளின் உடல்நலன் குன்றியதால் விவரமறிந்த பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
இதை அறிந்த பொதுமக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். பத்லாபூரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டங்களில் 17 போலீஸார், 8 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது மும்பை உயர் நீதிமன்றம். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரேவதி மொஹிதே தேரே மற்றும் பிரித்விராஜ் சவான் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் காவல்துறையையும், பள்ளி நிர்வாகத்தையும் சரமாரியாக சாடினார்கள்.
நீதிபதிகள் கூறியது: “தானே பள்ளிச் சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பெரிய போராட்டத்தை நடத்தும் வரை காவல் துறை அசைந்து கொடுக்கவில்லை. அப்படியென்றால் ஒவ்வொரு சம்பவத்திலும் இதுபோன்ற மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டுமா? சிறுமிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் ஏற்புடையது அல்ல
3, 4 வயது சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற மிகக் கொடூரமான சம்பவத்தை காவல் துறை எப்படி லகுவாக எடுத்துக் கொள்கிறது? பள்ளிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்றால் என்ன செய்வது? மூன்று, நான்கு வயது குழந்தைகளால் என்ன செய்ய இயலும்? இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
பத்லாப்பூர் சம்பவத்தை காவல் துறை கையாண்ட விதம் இந்த நீதிமன்றத்துக்கு அதிருப்தியைத் தருகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். உண்மையில் இதைத்தான் காவல்துறையும் விரும்பியிருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் இனியும் பாதிக்கப்படக் கூடாது. காவல் துறை அந்தச் சிறுமிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்?
காவல் துறை சம்பவம் குறித்த தகவல் வந்தவுடனேயே எஃப்ஐஆர் பதிவு செய்திருக்க வேண்டாமா? காவல் துறை, நீதித் துறை மீதான மக்கள் நம்பிக்கை குறையவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் மக்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டும் என்றால் எதிராகாலத்தை யோசித்துப் பாருங்கள். காவல் துறை இதுபோன்ற சம்பவங்களை எப்படிக் கையாள வேண்டும் என்று காவலர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.
அரசாங்கம் இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. அந்த அறிக்கையில் காவல் துறை ஏன் எஃப்ஐஆர் பதிவு செய்ய தாமதப்படுத்தியது என்ற விளக்கம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரிடம் இதுவரை காவல் துறை விளக்கம் பெறவில்லை என்றும் நீதிமன்றம் அறிகிறது. இந்த வழக்கில் எதையாவது மூடிமறைக்க காவல் துறை முயன்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று நீதிபதிகள் கூறினர். அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.