புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் “மாதவிடாய் சுகாதாரம் மற்றும் கோளாறுகள்” குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மகளிர் மேம்பாட்டுக்குழு சார்பில் இன்று காலை 10.30 மணியளவில் “மாதவிடாய் சுகாதாரம் மற்றும் கோளாறுகள்” குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், செந்தில் நர்ஸிங் ஹோம், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ஜெயலெட்சுமி (எ) சுகன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கருப்பை நார்த்திசுக்கட்டிகள், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற மாதவிடாய் கோளாறுகளுக்கான காரணங்களை பற்றியும் கூறினார். அவர் மாணவர்களுக்கு மாதவிடாய் கோளாறுகளின் அறிகுறிகளையும் விவரித்தார்.

மேலும் அந்த பிரச்சனைகளுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் தீர்வுகளை வழங்கினார். மாதவிடாய் சுகாதாரத்தை கவனித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தினார். மாதவிடாய் என்பது பெண்களின் உடலின் முக்கியமான மற்றும் அவசியமான செயல்களில் ஒன்றாகும். இது சுய பாதுகாப்புக்கு தகுதியானது என்று கூறினார். மாதவிடாயின் போது சரியான சுகாதாரம், வலியைக் கட்டுப்படுத்தவும், மாதவிடாய் காலத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவும். மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் கலந்து கொண்டு தலைமையுரை வழங்கினார். மகளிர் மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.ரத்னாதேவி, கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் வரவேற்புரையாற்றினார். மகளிர் மேம்பாட்டுக்குழு உறுப்பினர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பி.லெட்சுமி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.