புதுக்கோட்டை அருகே மறமடக்கி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொழிஞ்சியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மறமடக்கி ஸ்ரீ பொழிஞ்சியம்மன் கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்கிறது.

இந்த கிராமத்தில்  5 தலைமுறைக்கு பிறகு மது எடுப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தாண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடியின்றி மக்கள் வாழவும் வேண்டி நடைபெற்ற இந்த திருவிழாவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நெல்மணிகளால் நிரப்பப்பட்ட வெங்கலம் மற்றும் சில்வர் குடங்களில் தென்னம்பாளைகளை வைத்து அதை அலங்கரித்து, மது குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கும்மியடித்தும், குழவையிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, பொழிஞ்சியம்மன் கோயிலை சுற்றி வலம் வந்து தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி அங்கு  வழிபாட்டில் ஈடுபட்டனர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் மது குடங்களை  தலையில் சுமந்தவாறு வந்து பொழிஞ்சியம்மன் கோயிலை சுற்றி வந்த காட்சி காண்போரை கவர்ந்தது.

இக்கோவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் சொந்த ஊரான மறமடக்கி கிராமத்தில் அமைந்துள்ளது. மதுக்குடங்களை சுமந்து வந்த பெண்களுடன் அமைச்சர் மெய்யநாதன் ஊர்வலமாக 3 கிமீ தூரம் வரை நடந்து வந்து பொழிஞ்சியம்மனை வழிபட்டார். திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.