சென்னை மாநகராட்சி சார்பில் இன்று மாநகரம் முழுவதும் உள்ள 1373 பேருந்து நிறுத்த நிழற்குடைகள் தூய்மைப்படுத்தப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் 418 கிமீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இவற்றில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சீராக செல்வதற்கும், நடைபாதைகளில் மக்கள் சிரமமின்றி செல்வதற்கும் ஏற்ப, ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவின்படி, கடந்த ஜூலை 22-ம் தேதி இரவு முதல் மாநகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பிரதான சாலைகளில் தூய்மைப் பணி நிறைவுற்ற நிலையில் தற்போது உட்புற சாலைகளில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சாலையோரம் நீண்ட நாட்களாக கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன. இதோடு சேர்த்து, முதற்கட்டமாக 1315 வாகனங்கள் சாலையோரங்களில் கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டு, அவையும் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த தூய்மைப் பணிகள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க ஆணையர் குமரகுருபரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாநகரப் பகுதியில் பெரும்பாலான பேருந்து நிறுத்த நிழற்குடை பகுதிகள் அசுத்தமாக காணப்படுகிறன்றன. மது போதையில் இருப்போர், மனநலம் பாதிக்கப்பட்டோர் நிரந்தரமாக வசிக்குமிடமாகவும் மாறியுள்ளது. பல இடங்களில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அரசின் சாதனை விளம்பரங்கள் மீது கட்சி மற்றும் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற நிலையில், ஆணையர் குமரகுருபரன் உத்தரவின்படி, இன்று காலை தீவிர தூய்மைப் பணியின் ஒரு பகுதியாக மாநகராட்சி பேருந்து நிறுத்த நிழற்குடைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் 1373 பேருந்து நிறுத்தங்களில் இந்த தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றன.