கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் : தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் அப்பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பாக காவல்துறையும், தமிழக அரசும் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய எக்ஸ் சமூகவலைதளத்தில், கிருஷ்ணகிரியில் என்சிசி முகாமில் 13 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற ஊடகச் செய்தியின் அடிப்படையில் அது தொடர்பாக ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கிறது. இவ்விவகாரத்தில் உரிய நேரத்தில் நியாயமான விசாரணையை உறுதி செய்ய தமிழக டிஜிபிக்கு ஆணையம் உத்தரவிடுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வலியுறுத்துகிறது. கிருஷ்ணகிரி சம்பவம் தொடர்பாக காவல்துறையும், தமிழக அரசும் மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் தேசிய மாணவர் படை (என்சிசி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், என்சிசி முகாமிற்குச் சென்ற 12 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 8-ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவியருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணி அளவில், என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர், மாணவியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். உடனே அவரது பெற்றோர் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச் சம்பவத்தில் பயிற்சியாளர், தாளாளர், முதல்வர் உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் என்சிசி முகாமில் 13 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஊடகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து தமிழக காவல்துறை மற்றும் அரசாங்கத்திடம் அறிக்கை கோரியுள்ளது.