கல்வராயன் மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்க 4 வாரங்களில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதி வாய்ப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், கல்வராயன் மலைப் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், “கல்வராயன் மலைப்பகுதியில் ஆம்புலன்ஸ் செல்ல ஏதுவாக சாலை வசதி ஏற்படுத்துவதை முதலில் உறுதி செய்ய வேண்டும். அவசர உதவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதையும், பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்,” என கருத்து தெரிவித்தனர்.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, “தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கான மேம்பாட்டு பணிகள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் கையில் மந்திரக்கோல் எதுவும் இல்லை. ஒரே இரவில் எல்லாம் நடந்து முடிந்து விடாது. பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்களின் வசதிக்காக இரு மினி பேருந்துகளை இயக்க வேண்டும்,” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “கல்வராயன் மலைப்பகுதியில் 132 கிராமங்கள் உள்ளன. ஆனால் அங்குள்ள ஒரே ஒரு மாணவர் மட்டுமே சட்டப்படிப்பை படித்து வருகிறார் என்றால் அரசின் செயல்பாட்டை எப்படிப் பார்ப்பது? அனைவருக்கும் கல்வி உரிமை கிடைக்க வேண்டும். அதேப்போல அங்கு சாலைகள் இல்லை எனக் கூறவில்லை. அவை வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் முழுமையாக இல்லை. பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்ல முடியவில்லை. போலீஸார் இந்த மலைக் கிராமங்களுக்கு செல்ல வேண்டுமென்றாலும் சாலை வசதி பிரதானமானது. மலைவாழ் மக்கள் மீது வனத்துறை அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடாது,” என்றனர்.
அதற்கு மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆகியோர், “கல்வராயன் மலைப் பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை முழுமையாக மேற்கொள்ள போதிய அவகாசம் வழங்க வேண்டும். மேலும், மலைவாழ் மக்கள் மீது எந்தவொரு அதிகார துஷ்பிரயோகமும் செய்யக்கூடாது என வனத்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், “இந்த மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். சாலைகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் நியமனம் போன்ற மேம்பாட்டு பணிகள் குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கும் வகையில் நான்கு வாரங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிட வசதி ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்.19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.