மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்யுமாறு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய (யுபிஎஸ்சி) தலைவருக்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை அன்று மத்திய அரசு, 10 இணை செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அரசுத் துறைகளில் சிறப்பு நிபுணர்களை (தனியார் நிறுவனங்களில் இருந்தும்) நியமிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டது. இந்த விளம்பரத்தை நிறுத்திவைக்குமாறு மத்திய அமைச்சர் தற்போது யுபிஎஸ்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் தனது கடிதத்தில், “கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்ட பெரும்பாலான பதவிகள் தற்காலிகமானவையே. இவற்றில் அனுகூலமானவை என்று சொல்லப்படும் விஷயங்கள் உட்பட எங்கள் அரசின் முயற்சிகள் அனைத்தும் நிறுவனங்களின் தேவையின் அடிப்படையிலானது. வெளிப்படையானது.

நேரடி நியமன செயல்முறையானது அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள சமத்துவம், சமூக நீதி, அதிலும் குறிப்பாக இடஒதுக்கீடு விதிகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நமது பிரதமர் உறுதியாக நம்புகிறார். நேரடி நியமன முறை என்ற கருத்தாக்கம் இரண்டாவது ஏஆர்சி-யால் அஙகீகரிக்கப்பட்டது. பின்பு கடந்த 2013-ம் ஆண்டு ஆறாவது ஊதியக் குழுவால் ஆதரிக்கப்பட்டது. அதன் செயல்முறை வரலாற்று ரீதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை கொண்டிருக்கவில்லை.

பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது நமது சமூக அமைப்பில் ஒரு மூலக்கல் போன்றதாகும். அது வரலாற்று அநீதியை போக்குவதுடன் அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவிக்கிறது. சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இதனால் விளிம்பு நிலைச் சமூகங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் அரசுப் பணிகளில் தங்களின் பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.