மழையூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்

oplus_0

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மழையூரில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தொழிலாளர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா  மழையூரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர். வரும் செப்டம்பர் மாதம் 7 தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும்  கொண்டாடப்பட உள்ளது. மழையூரில் களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் பிரசித்திபெற்றதாகும். இங்கு செய்யப்படும் விநாயகர் சிலைகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் இந்த பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தீவிரமாக  ஈடுபட்டுள்ளர்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர் சக்திவேல் கூறும் போது, நாங்கள் பல தலைமுறைகளாக மண்பாண்ட தொழில் செய்துவருகிறோம். வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கும் சென்று களிமண் கைவினை பொருள்கள், சிலைகள் செய்து வருகிறோம். அச்சு விநாயகர் தொடங்கி 1அடி முதல் 10 அடி வரை செய்துவருகிறோம். ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். இங்கு சிலைகள் களிமண்ணால் செய்யப்படுவதால் சுற்றுசூழலை பாதிக்காத வகையில் செய்துவருகிறோம். ஜல்லிக்கட்டு விநாயகர், தாமரை விநாயகர், சிங்க விநாயகர் போன்ற சிலைகளை வாடிக்கையாளர்களின் விருப்பப்படி  செய்து வருகிறோம்.

எங்களது மண்பாண்ட பொருட்களை பாதுகாக்கும் வகையில் அரசு சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் அந்த பணி பல வருடங்களாக பாதியிலையே நிற்கிறது. அந்த பணியை தொடங்கி மண்பாண்ட பொருள் சேமிப்பு கிடங்கு வசதியை அமைத்து தரவும், மழைகால நிவாரணம் அரசு அறிவித்தும் மழையூர் பகுதிக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மழைக்கால நிவாரணமும் வழங்க வேண்டும் என கூறினார்.