தமிழக அரசின் மக்களை பாதிக்கும் எந்தப் பிரச்சினையிலும் சமரசம் இல்லை : மார்க்சிஸ்ட் உறுதி

சாதி மறுப்பு திருமணங்கள் செய்தோரை பாதுகாக்கவும், ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழக அரசின் மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினையிலும் எங்களுக்கு சமரசம் இல்லை என்று அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் தென்மண்டல இடைக்குழுச் செயலாளர்களுக்கான இருநாள் பயிற்சி வகுப்பு விருதுநகரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசி, பயிற்சி வகுப்பை நிறைவு செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவ கூறியது: “தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்தவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சாதி மறுப்பு திருமணம் செய்தோர் ஆணவக் கொலை செய்யப்படுகின்றனர். இது கண்டிக்கப்பட வேண்டியது. சாதி மறுப்பு திருமணங்கள் செய்தோரை பாதுகாக்கவும், ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும். தமிழக முதல்வர் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அருந்ததிய மக்களுக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது வரவேற்கத்தக்கது. இக்கோரிக்கைகாக விருதுநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. சென்னையில் பேரணியும் நடத்தப்பட்டது. எங்கள் கோரிக்கை நிறைவேறியதற்காககவும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும் திண்டுகல்லில் இம்மாதம் 29ம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடத்த உள்ளோம்.

கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியிடப்பட்ட விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. பாஜகவை நாங்கள் எதிர்க்கிறோம். திமுகவும் எதிர்க்கிறது. அதனால் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இதில் எந்த வேறுபட்ட கருத்தும் கிடையாது. அதேவேளையில், தமிழக அரசின் மக்கள் விரோத போக்குக்களைக் கண்டித்தும் நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதை கைவிட்டு நிரந்தப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

நலிந்துள்ள ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலை, மூடப்பட்ட மதுரை சர்க்கரை ஆலை, கூட்டுறவு நூற்பாலைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று தமிழகம் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு எடப்பாடி அரசுதான் காரணம். ரேஷன் கடைகளில் தொடர்ந்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் வழங்க வேண்டும். அரசு இதை நிறைவேற்றவில்லையெனில் போராட்டம் நடத்துவோம். தமிழக அரசின் மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினையிலும் எங்களுக்கு சமரசம் இல்லை” என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மாவட்டச் செயலாளர் அர்ஜுணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.