“தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காத நிலையில் மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்” – கனிமொழி எம்.பி

“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி வரவில்லை. தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காத நிலையில், மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்?” என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி கூறியவது: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் அருந்ததியருக்கு மூன்று சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அருந்ததியருக்கான மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும் அந்த வழக்கில் மிகப் பெரிய வெற்றியை முதல்வர் பெற்று கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கும் உழைக்கக்கூடிய அரசாக செயல்பட்டு வருகிறது.

வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் உழைக்கக் கூடிய அரசாக செயல்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று பாரபட்சம் இல்லாமல் நடக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. அருந்ததியருக்கான மூன்று சதவீத இடஒதுக்கீடு தேவை என்பதே திமுகவின் நிலைப்பாடு. முதல்வர் அதனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார். இடஒதுக்கீடு என்பது சட்டரீதியான போராட்டத்தின் மூலம் கிடைக்க பெற்றுள்ளது.

மக்களுக்கு கிடைக்க கூடிய உரிமைகளுக்காக திமுக போராடி வருகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி வரவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி மக்களுக்கான நிவாரண நிதி வரவில்லை. தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காத நிலையில் மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? மக்களிடமும் மனிதருடனும் பழகும்போது எளிமையாக அன்பாக பழகக் கூடியவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால், மாநில உரிமைக்காக போராடும்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போல் உறுதியாக இருப்பார்” என்று கனிமொழி தெரிவித்தார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜகவினர் பங்கேற்றது, தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக – திமுக இடையில் ரகசிய உறவு இருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், கனிமொழியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.