வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற ஏஐசிசிடியு தலைவரை கிளாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
10 ஆண்டுகள் அரசுத் துறையில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக 2021 தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கவில்லை.
இந்நிலையில் வண்டலூர் உயரியல் பூங்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (AICCTU) சார்பில் மாநில சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன் தலைமையில் அறிவிக்கப்பட்டது.
அதை முடக்கும் வகையில் நேற்று முதல் தொடர்ச்சியாக காவல்துறை தரப்பில் போராட்டத்தை மாற்றக் கோரி பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு இரணியப்பன் வீட்டுக்கு ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு காவலர்கள் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்
இதனையடுத்து இன்று அதிகாலை 5.30.மணிக்கு 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரணியப்பனின் வீட்டுக்கு சென்று அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, கோரிக்கை வைத்து போராடுகிறவர்களை கைது செய்வதை ஏஐசிசிடியு நிர்வாகிகள் கண்டித்துள்ளதோடு ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த முயன்ற இரணியப்பனை உடனே அவரை விடுவிக்க வேண்டும், வண்டலூர் உயிரியல் பூங்கா தினக்கூலி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மற்ற நிர்வாகிகள் தற்போது கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் கூடி வருகின்றனர் அசம்பாவித சம்பவங்கள் தடுப்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.