கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை இன்று விசாரிக்கத் தொடங்கியது.
இந்த விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஆஜராகினர். மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது ஓர் அடிப்படையான பிரச்சினை என்று தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
உயிரிழந்த மாணவியின் பெயர், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை ஊடகங்களில் வெளிவந்ததற்கு தலைமை நீதிபதி மிகுந்த கவலை தெரிவித்தார். மாணவியின் மரணத்தை தற்கொலை வழக்காக மாற்ற மருத்துவக் கல்லூரியின் முதல்வர் முயன்றதாகவும் சந்திரசூட் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “சம்பவம் நடந்தபோது பெற்றோர்கள் மருத்துவமனையில் இல்லை. வழக்குப் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு மருத்துவமனையின் மீது உள்ளது” என்று தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.
வழக்கை விசாரித்து வரும் சிபிஐ வரும் வியாழக்கிழமை தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.
மருத்துவ நிபுணர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்குதல், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்தல், மருத்துவர்கள் / மருத்துவ நிபுணர்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடுகள், தனி கழிவறைகள், மருத்துவமனைகளில் முக்கியமான பகுதிகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறைகள், சிசிடிவி கேமராக்கள், இரவு போக்குவரத்து வசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த பணிக்குழு ஆய்வு மேற்கொள்ளும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
இந்தப் பணிக்குழுவில், அறுவை சிகிச்சை நிபுணர் துணை அட்மிரல் ஆர்டி சரின், டாக்டர் டி நாகேஷ்வர் ரெட்டி, டாக்டர் எம் ஸ்ரீனிவாஸ், டாக்டர் பிரதிமா மூர்த்தி, டாக்டர் கோவர்தன் தத் பூரி, டாக்டர் சவுமித்ரா ராவத், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் பேராசிரியை அனிதா சக்சேனா, மும்பையில் உள்ள கிராண்ட் மருத்துவக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் பல்லவி சப்ரே, எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை மருத்துவர் பத்மா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்தப் பணிக்குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக இந்திய அரசின் கேபினட் செயலாளர், இந்திய அரசின் உள்துறை செயலாளர், மத்திய சுகாதார அமைச்சக செயலாளர், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், தேசிய தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோர் இருப்பார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை தாக்கப்பட்ட விவகாரத்தில் போதிய பாதுகாப்பை காவல் துறை வழங்கி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, போராட்டக்காரர்கள் வந்தபோது போலீஸார் அங்கிருந்து ஓடிவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் கூறியதை பதிவு செய்தார். ஆர்.ஜி கர் மருத்துவமனைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை : கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கையால் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் உடலின் உள்ளே 9 இடங்கள், வெளியே 16 இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த 9-ம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. கையால் கழுத்தை நெரித்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இது கொலைதான். பாலியல் வன்கொடுமையும் நடந்ததற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரம் உள்ளது. பிறப்பு உறுப்பில் இருந்த 151 கிராம் திரவம் மற்றும் ரத்த மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை.
நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்தம் உறைந்துள்ளது. கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் என உடலின் வெளி பகுதியில் 16 இடங்களிலும், கழுத்து தசை, உச்சந்தலை என உள் பகுதியில் 9 இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவர் கடுமையாக போராடி உள்ளார் என தெரிகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ துறை பேராசிரியர் அபூர்வ பிஸ்வா, இணை பேராசிரியர் ரினா தாஸ், என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரியின் தடயவியல் மருத்துவ துறை துணை பேராசிரியர் மொல்லி பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர். கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் விரல் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் ரத்த மாதிரியும் ஒன்றுபோல இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால், கொலையில் சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.