முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அரசு விழாவாகும். இது எந்தவித அரசியலுக்கும் அப்பாற்பட்டது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமான மூலம் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றிபெற்று சிறப்புமிக்க ஆட்சி அமைத்துள்ளார். மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை மக்களின் நலனுக்காக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்று கோடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இரண்டாவது கையெழுத்து மூலம் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியை வழங்கியுள்ளார். இந்த நாட்டை பிரதமர் மோடி வேகமான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவுதளம், துறைமுகத்தை மேம்படுத்துதல் என இந்த அரசு மிக வேகமாக வளர்ச்சி பணிகளை செய்வதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றாததை மிகப்பெரிய செயலாக நான் பார்க்கிறேன். இதை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது.
தூத்துக்குடிக்கு பல ரயில்வே திட்டங்களை பிரதமர் செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக தூத்துக்குடி – மதுரை இரட்டை ரயில் பாதை திட்டம் மோடி தொடங்கி வைத்துள்ளார். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. ஓடுதளம் மட்டும் மூன்று கிலோ மீட்டர் தூரம். அதாவது சென்னையை விட மிகப்பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையமாக மிகப்பெரிய ஏர்பஸ் வசதி கொண்ட விமான நிலையமாக அமைந்து வருகிறது.
கிருஷ்ணகிரியில் நடந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் வன்மையாக கண்டிக்கக் கூடியது. கோவையிலும் நேற்று இது போன்று நடந்துள்ளது. இதையெல்லாம் தமிழ்நாடு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும். கொல்கத்தாவில் இதுபோன்று மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. அங்கு அரசு சரியான நடவடிக்கையை எடுக்காததால் அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றுள்ளது.
மாநில அரசு மருத்துவர்களுக்கு முறையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கருணாநிதி நாணய வெளியீட்டு விழா ஒரு அரசு விழா. இது எந்தவித அரசியலுக்கும் அப்பாற்பட்டது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்துவது குறித்து நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் தமிழ்நாட்டின் துணை முதல்வராக வருவதால் தமிழ்நாட்டில் ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது.
தமிழ்நாட்டின் அமைச்சர்கள், திமுக என்னென்ன செய்து வருகிறார்களோ, அதை அவர்கள் இன்னும் அதிகமாக செய்வார்கள். அதாவது தமிழ் மக்களுக்கு என்னென்ன தீங்கு செய்து வருகிறார்களோ அது இன்னும் அதிகமாகும்” என்று எல்.முருகன் கூறினார்.