கேளம்பாக்கம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் கணவனும் மனைவியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாம்பரத்தை அடுத்துள்ள மாடம்பாக்கம் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (50). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாமல்லபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயதுர்கா (45) மாமல்லபுரம் புனித மேரி மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இருவரும் வாரா வாரம் சனிக்கிழமை இரவு மாடம்பாக்கத்திற்கு சென்று அங்கு வசிக்கும் தங்களது மகள் வீட்டில் இருந்துவிட்டு திங்கட்கிழமை அதிகாலையில் மாமல்லபுரத்திற்கு திரும்புவது வழக்கம்.
அதுபோல் கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் மாடம்பாக்கத்திற்கு சென்றுவிட்டு. இன்று அதிகாலை 4.30 மணியளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரத்துக்கு திரும்பினார். அப்போது கேளம்பாக்கம் அருகே சோனலூர் என்ற இடத்தில் வந்தபோது ஹூண்டாய் நிறுவனத்தின் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து அவர்களின் மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கு நிற்காமல் பேருந்தின் ஓட்டுநர் தப்பினார்.
அதிகாலை நேரம் என்பதாலும் போக்குவரத்து அதிகம் இல்லாத காரணத்தாலும் இருவரது சடலங்களும் சாலையிலேயே கிடந்துள்ளது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவ்வழியே சென்றவர்கள் பார்த்துவிட்டு கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீஸார் மற்றும் கேளம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரது சடலங்களையும் மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திச் சென்ற பேருந்தையும் அடையாளம் கண்டுபிடித்த போலீஸார், அதன் ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவைச் சார்ந்த கோடீஸ்வரன் (26) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.