அரிமளத்தில் தைலமரக் காடுகளை அப்புறப்படுத்த வேண்டும் – சிபிஎம் தலைமையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தைலமரக் காடுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

அரிமளம், செங்கீரை பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீராதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தைலமரக் காடுகளை அப்புறப்படுத்த வேண்டும். தோட்டக்கலைத் துறையின் மூலமாக பண்ணைகளை உருவாக்கி அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நாட்டு மரங்களை நட்டு வளர்த்து சுற்றுச்சூழலுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் வழிவகை செய்ய வேண்டும். நிலமற்ற விவசாயிகளுக்கு நிலக்களைப் பிரித்து குத்தகைக்கு விட வேண்டும். நீதிமன்ற உத்தரவைக் காரணம்காட்டி தைல மரங்கள் நடுவதைக் கைவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி ஏ.சாத்தப்பன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒள்றியச் செயலளார் ஆர்.வி.ராமையா நிகழ்வை ஒருங்கிணைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது, திருமண விழாவுக்கு வெடி வெடித்து குதிரை, யானை ஊர்வலத்துக்கு ஆதரவு அளிக்கும் காவல் துறை,  ஜனநாயக முறையில்  ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளனர். ஊர்வலத்துக்கு தடை விதித்து இருக்கலாம். கோரிக்கைக்காக அனைவரும் ஓரணியில் திரண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியாது.

இயல்பாகவே புதுக்கோட்டை வறட்சி பாதித்த மாவட்டமாக ஆண்டுதோறும் இருந்து வருகிறது. வறட்சியை மேலும் அதிகரிக்கும் வேலையை தைலமரக் காடுகள் செய்து வருகின்றன. இந்தத் தைலமரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தையே உரிஞ்சுவாதாகக் கூறப்படுகிறது. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தைலமரக் கன்றுகளை நடுவதை வனத்துறையினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். நிலங்களில்  பல்லுயிர் உயிரினங்கள் வாழக்கூடிய காடுகளை உருவாக்க வேண்டும். கடந்த ஆண்டு டிஎன்பிஎல் நிறுவனத்துக்கு ரூ.600 கோடி லாபம் கிடைத்துள்ளது. உற்பத்தியைக் கொடுத்த இம்மாவட்ட மக்களுக்கு எதாவது அரசு கொடுத்துள்ளதா? இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்பினேன். புதிதாக தைலமரக் கன்றுகள் நடப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வனத்துறையினர் இதற்கு நேர்மாறாக செயல்படுகின்றனர். வனத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்க விரும்புகிறோம். இந்தப் போராட்டம் இன்றோடு முடியப்போவதில்லை. விரைவில் மாவட்ட அளவிலான போராட்டமாக இது வெடிக்கும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு விதொச மாநில செயலாளர் எஸ்.சங்கர், இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஜி.எஸ்.தனபதி, சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி. மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், ஜனநாயக மாதர்சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மஞ்சுநாதன், ஆர்.கணேசன், பழ.குமரேசன், பி.ஆர்.கணேசன், பாலகுருநாதன், யுவராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், சு.மதியழகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.அடைக்கப்பன், ஏ.மணி, வி.மாணிக்கம், டி.சக்திவேல், ஆர்.செல்லையா, என்.பழனியப்பன், ஜி.தமிழ்ச்செல்வன், எம்.அடைக்கலமேரி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.