42 மருத்துவர்களின் டிரான்ஸ்பர் உத்தரவு சர்ச்சை எதிரொலி : திரும்பப் பெற்றது மேற்கு வங்க அரசு

மேற்கு வங்கத்தில் 42 மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த உத்தரவை அம்மாநில சுகாதாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த 16ஆம் தேதி அன்று மேற்கு வங்கத்தில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் 42 மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்து அம்மாநில சுகாதாரத் துறை உத்தவிட்டது.

இந்த இடமாற்ற உத்தரவில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த, மருத்துவர்கள் சங்கீதா பால், சுப்ரியா தாஸ் இருவரது பெயரும் இடம்பெற்றிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த இடமாற்ற உத்தரவை கடுமையாக விமர்சித்தன.

இதனையடுத்து தற்போது இந்த பணியிடமாற்ற உத்தரவை மேற்கு வங்க சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், இந்த பணியிடமாற்றம் வழக்கமான நடைமுறைதான் என்றும், பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த தினத்துக்கு முன்பே இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. எனினும் இந்த இடமாற்ற உத்தரவை திரும்பப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.