இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக அத்திக்கடவு – அவிநாசி திட்டம் திறக்கப்பட்டுள்ளது : இபிஎஸ் விமர்சனம்

இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக அத்திக்கடவு -அவிநாசி திட்டம் திறக்கப்பட்டுள்ளதாக, பல்லடத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சித்தார்.

பல்லடம் அருகே நாதேகவுண்டம்பாளையத்தில் உழவர் காவலரும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.பழனிசாமியின் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் பொங்கலூர் இரா.மணிகண்டன் வரவேற்றார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியின் தலைவருமான என்.எஸ்.பி.வெற்றி தலைமை வகித்து பேசியதாவது: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டுவந்தவர். டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்தவர் மற்றும் குடிமராமத்து திட்டத்தை வெற்றிகரமாக செய்தவரை கொண்டு இந்த மணிமண்டபத்தை திறந்துள்ளோம்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றியது போல், ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். என்.எஸ்.பழனிசாமியின் மணிமண்டபத்தில், அரசு விழா நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு வைக்கிறோம் என்று பேசினார். இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பேசியதாவது: உழவர் சமுதாயத்துக்காக வாழ்ந்து மறைந்தவர் கிணத்துக்கடவு தொகுதி முன்னாள் எம்எல்ஏ. என்.எஸ்.பழனிசாமி. தன் வாழ்நாள் முழுவதும் விவசாய மக்களுக்காக வாழ்ந்தவர்.

கருணாநிதியின் திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்த ஒட்டுமொத்த விவசாயிகளின் நினைவாக ஜூலை 5-ம் தேதியை நாம் அனுசரிக்கிறோம். அதற்கு காரணம் நாராயணசாமி நாயுடுவும், என்.எஸ்.பழனிசாமியும் தான். உழவர்களின் பிரச்சினையை சட்டப்பேரவையில் தொடர்ந்து எதிரொலித்தவர் என்.எஸ்.பழனிசாமி. அதிமுக ஆட்சி தான் விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சியாக இருந்தது.

நானும் ஒரு விவசாயி. விவசாயிகள் படும் துன்பம், துயரம் எனக்கு தெரியும். எந்த தொழிலையும் செய்யலாம். ஆனால் விவசாயம் செய்வது கடினம். ஆகவே தான் நமது ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்தோம். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இன்றி 60 ஆண்டுகளுக்கு மேலாக வறட்சியால் வாடிக்கொண்டிருந்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஜெயலலிதாவின் உறுதிமொழியை நான் முதல்வரான பின்பு நிறைவேற்றினேன். மாநில நிதியில் ரூ. 1653 கோடி ஒதுக்கப்பட்டு, அனைத்து பணிகளும் துவங்கப்பட்டன.

2021 வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. அதன்பின்பு வந்த திமுக அரசு எஞ்சிய 10 சதவீத பணிகளை 6 மாதத்தில் முடித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதிமுக திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுவிட்டனர். திமுக அரசின் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டுவந்தோம். இன்றைக்கு வேறுவழியில்லாமல் திமுக துவங்கி உள்ளது. இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை ஸ்டாலின் அரசு தாமதப்படுத்தி உள்ளது.

ஆனால் முழுக்க அதிமுக அரசு தான் திட்டத்தை கொண்டுவந்தது. மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் நிரம்பி காவிரி – குண்டாறு திட்டத்தை கொண்டுவந்தோம். அதில் முதல்கட்டமாக புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டு பணி துவக்கினோம். அதையும் கிடப்பில் போட்டுவிட்டனர். நஞ்சை புகழூர் உள்ளிட்ட 2 இடங்களில் தடுப்பணைகள் ரூ. 450 கோடி மதிப்பில் கொண்டுவந்தோம். 2 கரைகள் ஓரமாக தடுப்புச்சுவர் கட்டவில்லை. 1 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும். அதிமுக ஆட்சியில் ஒரு சொட்டுத்தண்ணீர் கூட வீணாகமால் ஓடை, நதிகள் குறுக்கே தடுப்பணைகள் கட்டினோம். ஆனால் இவற்றை எல்லாம் திமுக கிடப்பில் போட்டது தான் மிச்சம்.

வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசு மட்டுமே. புயலால், வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது பயிர்காப்பீடு தந்தோம். ரூ. 9300 கோடி விவசாயிகளுக்கு இழப்பீட்டை பெற்றுத்தந்தோம். தொடக்க வேளாண் வங்கியில் பயிர்க்கடன் ரூ. 12 ஆயிரத்து 110 கோடியை பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள். கேரளாவுக்கு நேரில் சென்று எனது தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

கேரளா முதல்வர் பினராயி விஜயன், பரிசீலிக்க சிந்திப்பதாக சொன்னார். அப்போது 3 கட்ட பேச்சுவார்த்தைகளுடன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணக்கமான சூழ்நிலையுடன் அந்த திட்டத்தை நிறைவேற்ற முயன்றோம். அதற்கு பின்பு வந்த திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை. மீண்டும் வரும் ஆட்சியில் ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்று இபிஎஸ் பேசினார்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம், பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.