கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலையில் நேர்மையான விசாரணை மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா வன்கொடுமை போன்ற கொடுஞ்செயலுக்கு நாடு தழுவிய கண்டனம் தெரிவிக்கவும், தேசிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் உடனடியாக கொண்டு வரவும், தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிபுரியும் இடங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் தங்குமிடம் போதிய வசதிகளும் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் இரவு நேர பணிக்கு வருவோருக்கு மருத்துவமனைகளில் உரிய தங்கும் இடம் வழங்க வேண்டும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவக் கழகம், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். செயலாளர்கள் கணேஷ், பழனிசாமி, ஆரோக்ய ரூபன் ராஜ், பொருளாளர் ஜெயராமன் மற்றும் இந்திய மருத்துவ சங்க கிளைகளின் நிர்வாகிகள், மாணவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் ஒரு மணி நேரம் (காலை 7.30 மணி முதல் 8.30மணி வரை) புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்தனர்.
பின்னர், விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள், மருத்துவ மாணவ மாணவிகள், உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள், பயிற்சி மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.