இமானுவேல் சேகரன் நினைவு நாள் : வாடகை வாகனங்கள், திறந்த வேன்கள், டூ வீலர்களுக்கு தடை

செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பரமக்குடி வருபவர்கள் வாடகை வாகனங்கள், திறந்த வேன்கள், இருசக்கர வாகனங்களில் வர அனுமதியில்லை, என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பரமக்குடியில் 11.09.2024 அன்று சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டிய ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தையொட்டி 11.09.2024 அன்று அஞ்சலி செலுத்த வரும் முக்கியத் தலைவர்கள், பொதுமக்கள் வருகை தருவதற்கான முன்னனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உரிய வழித்தடத்தில் வந்து செல்லும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு வருபவர்கள் சொந்த வாகனங்களில் வரவேண்டும். இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. வாடகை வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. மேலும், மக்களின் தேவைக்கேற்ப அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தி எடுத்துச் செல்ல வேண்டும். பேருந்துகளில் மேற்கூரையில் பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வரவுள்ளதால் அதற்கேற்ப வாகனத்துக்கான முன் அனுமதி பெற்று ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிய நேரத்தில் அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி வந்து சென்று மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்புக் கொடுத்து நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்திட வேண்டும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.