“முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது,” என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது: “தேர்தல் எப்போது வந்தாலும் அதை உடனடியாக சந்திக்க தயாராக இருக்கும் இயக்கம் அதிமுக. விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக களப்பணியாற்றவும், வெற்றி பெறுவதற்கும் இக்கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 2026 சட்டப்பேரவை தேர்தலில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் வியூகம் வகுத்து, அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவதற்கும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த திமுக, அரசு தரப்பில் விருந்தில் பங்கேற்பதாக கூறி முதல்வர் ஸ்டாலின் மற்றும் 8 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 18-ம் தேதி, கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அதனால்தான் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்துவிட்டு, பின்னர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
திமுக கூட்டணி கட்சி எம்பி-க்கள் 40 பேருக்கும் மத்திய பாஜக அரசின் அமைச்சர் ஜே.பி.நட்டா, விருந்து வைக்கிறார். எனவே, பாஜகவுக்கும், திமுகவுக்கும் ரகசிய உறவு இருந்து வருகிறது. இதை சிறுபான்மை மக்கள் உணர்ந்துள்ளனர். கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது” என்று டி.ஜெயக்குமார் கூறினார்.