கோத்தகிரி அருகே கெங்கரை பகுதியில் அரசுப் பேருந்து மீது உயரழுத்த மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து பேருந்து ஓட்டுநர் பிரதாப், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூட்டடா கிராமத்துக்கு நாள்தோறும் கோத்தகிரி பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து கூட்டடா கிராமத்தில் இரவு நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களின் நலன் கருதி அங்கிருந்து இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி வழக்கம் போல் நேற்று இரவு கோத்தகிரியில் இருந்து கூட்டடா கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்து, கூட்டடா கிராமத்தில் நிறுத்தப்பட்டது. இன்று காலை வழக்கம்போல் பேருந்தை ஓட்டுநர் பிரதாப் இயக்கி வந்துள்ளார். அப்போது கெங்கரை அடுத்துள்ள கோவில்மட்டம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது, அதிக மேகமூட்டம் காரணமாக உயரழுத்த மின்சார கம்பி தாழ்வாக இருந்தது ஓட்டுநருக்கு தெரியாமல் போயிருக்கிறது. இதில் மின்சார கம்பி பேருந்து மீது உரசி பேருந்தின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
உடனே சுதாரித்த ஓட்டுநர் பேருந்தை சாலையிலேயே நிறுத்தி பேருந்துக்குள் இருந்த பயணிகளை இறக்கிவிட்டுள்ளார். கடைசியாக அவர் இறங்கும் போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், ஓட்டுநர் பிரதாப்பின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சோலூர்மட்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.