சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி பெரும் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான ஆடி கடைசி வெள்ளி பெரும் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடி கடைசி வெள்ளி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் கருட வாகன பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி இன்று மதியத்துக்கு மேல் நடைபெற்றது. முன்னதாக இன்று காலை 9 மணிக்கு உற்சவ அம்மனுக்கு கும்ப பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகத்தின் போது பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர், தயிர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அம்மனின் ஆடி வெள்ளி திருவிழாவை காண தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்தனர்.
பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. பக்தர்கள் அம்மனை வேண்டி, அக்கினிச்சட்டி, மாவிளக்கு பறக்கும்காவடி, தேர்இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இன்று மதியம் 2 மணிக்கு மேல் ஆடிப்பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் அம்மன் கருட வாகன பல்லக்கில் ஊர்வலமாக தெருக்களில் பவனி வந்து ஆற்றில் இறங்கி கோயிலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களை தவிர்க்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் இருவர், 4 டிஎஸ்பி-க்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, கோயில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் கோயில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.