‘நிதி பகிர்வில் வஞ்சனை’ – மத்திய அரசைக் கண்டித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், ரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்து கொள்வதாக மத்திய அரசைக் கண்டித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேவேளையில், கருணாநிதி நினைவு நாணயத்துக்காக மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்பட்டது. அது தொடர்பான தீர்மானம் உள்பட 3 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2024 மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது. மக்களவையில் வலிமைமிக்க எதிர்க்கட்சி வரிசை உருவாக காரணமாக திகழ்ந்தவரும், திமுகவுக்குத் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, தான் எதிர்கொண்ட 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல், அண்மையில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் களங்களிலும் வாகை சூடி, தொடர் வெற்றி நாயகராகத் திகழும் தமிழ்நாடு முதல்வருக்கு இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது உளம்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் அண்ணாவால் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி வருகிறது. இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.

கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடி மகிழ்ந்த நிலையில், திமுக.வின் பவளவிழா ஆண்டு நிறைவினை, திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 அன்று கொண்டாடி மகிழ இருக்கிறது.

முப்பெரும் விழா, இந்தப் பவள விழா ஆண்டில், திமுக தொடங்கப்பட்ட சென்னையில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் எழுச்சி மிகுந்த விழாவாகக் கொண்டாடப்படும் என இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

இந்திய மத்திய அரசு 100 ரூபாய் மதிப்பிலான கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்தமைக்கு இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளையில், மாநில உரிமைக்கான குரலைத் தொடர்ந்து முழங்கிடும் முதல்வரின் வழிகாட்டுதலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகின்ற நிலையிலும், தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், ரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்துக் கொள்வதையும் பாரபட்சம் காட்டுவதையும் வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கு இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்று மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.