ஜம்முவில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை : ராணுவ கேப்டன் வீர மரணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் தீபக் சிங் உயிரிழந்தார். துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷிவ்கர்-அசார் பெல்ட் பகுதியில் இந்த சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள ராணுவம், என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதி காயமடைந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. அசார் பகுதியில் ஒரு ஆற்றின் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தேடுதல் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னதாக, உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பாட்னிடாப் அருகே தங்கியிருந்த இந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் தாக்குதலுக்கு பிறகு, வனப்பகுதி வழியாக தோடா மாவட்டத்துக்குள் ஊடுருவியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு முழுவதும் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றதில், ராணுவ கேப்டன் தீபக் சிங் உயிரிழந்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுதந்திர தினத்துக்கு ஒருநாள் முன்னதாக தீவிரவாதிகள் தாக்குதல் நடந்திருப்பதை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி உபேந்திர திவேதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உயர்மட்ட ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.