சென்னையில் 6 இடங்களில் மாதிரி சாலையோர வியாபார வளாகங்கள் : அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சென்னையில் 6 இடங்களில் மாதிரி சாலையோர வியாபார வளாகங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் நலனை காக்கவும், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் மாநகராட்சி சார்பில் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளார். மாநகரம் முழுவதும் 35 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் மூலம் பயன்பெறவும் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நகர விற்பனைகுழு உறுப்பினர்கள் தேர்தலும் கடந்த ஆண்டு நடந்து முடிந்தது.

இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதி, தடை விதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மாநகரில் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையர் குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில், எத்தனை இடங்களில் சாலையோர வியாபாரத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளது, தடை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகள் எவை, எதற்காக அங்கு சாலையோர வியாபாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் அதிகாரிகளிடம் ஆணையர் கேட்டறிந்தார். இதையடுத்து, “விரைவில் மாநகரில் மாதிரி சாலையோர வியாபார பகுதிகளை அமைக்க வேண்டும்.

படிப்படியாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள கடைகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்க தேவையான இடங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களில் ஒவ்வொரு வட்டாரத்திலும் தலா 2 இடங்களை தேர்வு செய்து, சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதியாக வரையறுத்து, அங்கு, மாதிரி சாலையோர வியாபார வளாகங்களை உருவாக்க வேண்டும்” என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.