மத்திய அரசு வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதைக் கண்டித்து புதுச்சேரி சட்டப் பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி பதில் சொல்லாததால் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுடன் சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் வெளிநடப்பு செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்றைய நேரமில்லா நேரத்தில் திமுக எம்எல்ஏ-வான நாஜிம் பேசுகையில், “மத்திய அரசு வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதைக் கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மதச்சார்பற்ற நாட்டில் எம்மதத்திலும் பிற மதத்தினர் தலையிடக்கூடாது. ஆகவே, இந்தப் பேரவையில் பேரவைத் தலைவர் கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும்; அதை முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “புதுச்சேரி அமைதியான மாநிலம். மதச்சார்பற்ற மாநிலம் இது. கடந்த காலத்தில் பல உரிமைகளை நாம் இழந்துள்ளோம். எந்த முடிவையும் மக்களின் கருத்தறிந்து எடுக்க வேண்டும். வக்பு வாரிய திருத்தச் சட்டம் குறித்து முதல்வர் கருத்து கூட சொல்லவில்லை. மக்கள் மீது அதிகளவு பாசம் வைத்துள்ள இவரே இதுபற்றி ஏதும் சொல்லாமல் அமைதியாக இருப்பதால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்களான நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன் ஆகியோரும் காங்கிரஸ் எம்எல்ஏ-வான வைத்தியநாதனும் வெளிநடப்பு செய்தனர். இவர்களைத் தொடர்ந்து சுயேச்சை எம்எல்ஏ-வான பி.ஆர்.சிவாவும், “இது முக்கிய பிரச்சினை. இதற்கு முதல்வர் பதில் சொல்லாததால் நானும் வெளிநடப்பு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.