கொல்லிமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மர்மமான முறையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்யாணி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவ – மாணவியரை கொல்லிமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
கடந்த 10 நாட்களாக மாணவ – மாணவியர் அங்கு தங்கி பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில்,நேற்று இரவு ஹோட்டலில் உள்ள அறையில் அந்த மாணவி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு சென்ற பெற்றோரிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
எனினும்,மாணவி இறப்புக்கான காரணத்தை நிர்வாகத்தினர் தெரிவிக்கவில்லை என பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் தரப்பில் புகார் எழுப்பப்பட்டது. இதையடுத்து, மாணவியின் இறப்பில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று மதியம் 12 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் தேங்கி நின்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்தவர்கள், மாணவியின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி தொடர் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.