“அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும்” – கே.டி.ராஜேந்திரபாலாஜி

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் பாரபட்சமின்றி மாதம் ரூ.2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசியதாவது: அதிமுகவில், உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி. கட்சியை வைத்துப் பிழைக்க நினைப்பவர்களுக்கு இடமில்லை.

எந்தக் கட்சியிலும் பிரச்சினை இல்லாமல் இல்லை. மக்களவை தேர்தல், சட்டப் பேரவை தேர்தல் எனப் பிரித்துப் பார்த்து வாக்களிப்பவர்கள் தமிழக மக்கள். இந்த மக்களவைத் தேர்தலில் மோடி வேண்டாம் என்று ஒரு அணியும், மோடி வேண்டும் என்று ஒரு அணியும் போட்டியிட்டது. அவர்களைத் தாண்டி அதிமுக தனது வாக்கு வங்கியை நிரூபித்து உள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் பாரபட்சமின்றி மாதம் ரூ.2,500 வழங்கப்படும். மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி வாங்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய நல்ல திட்டங்களை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. திமுக, தாங்கள் செய்யாத திட்டங்களையும் செய்ததாக விளம்பரப்படுத்தி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தொகுதிக்கே வராமல் 3 முறை வெற்றி பெற்றவர் விருதுநகர் எம்பி-யான மாணிக்கம் தாகூர்.

தமிழக வெள்ளப் பாதிப்புக்கும், மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கும், பட்ஜெட்டிலும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து, திமுக கூட்டணி எம்பி-கள் பிரதமரை முற்றுகையிட்டு இருந்தால் நான் சல்யூட் அடித்திருப்பேன். அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத பட்ஜெட்டே இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ‘கோ பேக் மோடி’ என்று கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுக, ஆட்சிக்கு வந்த பின் அமைதியாகி விட்டது. தேசப்பற்று உள்ளவர்கள் அதிமுகவினர். கிரிக்கெட்டில் இந்தியா தோற்றால் கண்ணீர் விடுபவர்கள் அதிமுகவினர். அதையும் கை கொட்டி சிரிப்பவர்கள் திமுகவினர். மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் நமக்கு தூசு தான். அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது. 2026-ல் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.