திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதவத்தூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இதனை 100 வார்டுகளாக உயர்த்தும் வகையில், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு வட்டங்களைச் சேர்ந்த 27 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், அதவத்தூர் ஊராட்சியும் ஒன்று.
இந்த கிராம ஊராட்சியானது அதவத்தூர், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, கொய்யாத்தோப்பு பாளையம், மேலப்பேட்டை, நெட்டச்சிக்காடு, நொண்டிதிருமன்காடு, தப்புக்கொட்டிக்காடு, அடைக்கன்காடு, சீத்தாக்காடு, குன்னுடையான்காடு, சந்தை, ஜெ.ஜெ.நகர், விநாயகபுரம் ஆகிய சிற்றூர்களை உள்ளடக்கியது.
இங்கு சுமார் 3,500 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயமும், கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களையும் மக்கள் செய்து வருகின்றனர். ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியை மாநகராட்சியோடு இணைத்தால், எதிர்கால முன்னேற்றத்துக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பதால், மாநகராட்சியோடு இணைக்கக் கூடாது என வலியுறுத்தி இக்கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ம.ப.சின்னதுரை மற்றும் கிராம பட்டயதாரர்கள் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க பேரணியாக வந்தனர்.
ஆட்சியர் அலுவலக வாசலில் போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தி, உள்ளே செல்லமுடியாதவாறு கதவுகளை மூடினர். இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள், ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பலர் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆட்சியர் மா.பிரதீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வயலூர் சாலையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றிருந்த நிலையில், ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கு மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் செல்ல போலீஸார் அனுமதித்தனர். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.