அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து பங்குச்சந்தையில் இன்று காலை அதானி குழுமத்தின் பங்குகள் 7% வரை சரிந்தன. இதனால் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் தொடங்கியது. ஏற்கெனவே பங்குச் சந்தைகள் சரிவுடனேயே தொடங்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவ்வாறே சரிந்து வருகிறது.
ஹிண்டன்பர்க் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை கொண்டிருந்தனர். குறிப்பாக, மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர்.
இதன் காரணமாக, அதானியின் சந்தேகத்துக்குரிய பங்குதார நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செபியின் தலைவராக மாதபி புரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
தங்கள் மீதான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை மறுத்து செபியின் தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ‘ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களுடைய வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம்போல வெளிப்படையானவை. ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை தொடர்பாக செபி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில், செபியின் பெயரை கெடுக்கும் வகையில் தற்போது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘ஹிண்டன்பர்க் குறிப்பிடும் முதலீடு என்பது 2015-ம் ஆண்டு நானும் எனது கணவரும் சிங்கப்பூரில் வசிக்கும்போது செய்தது. செபி அமைப்பில் இயக்குனராக இணைவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது. தலைமை முதலீட்டு அதிகாரியான அனில் அஹுஜா எனது கணவரின் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர் என்பதால், அவர் மூலமாக முதலீடு செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அவர் பல காலமாக முதலீடுகளை கவனித்து வருகிறார். எனவே அவர் மூலமாக முதலீடு செய்யப்பட்டது’ என்று விளக்கமளித்தார்.
இதனிடையே தான், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் அதானி குழும பங்குகள் 7% வரை சரிவை கண்டன. தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவை நோக்கி செல்வதால் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் பங்கு வர்த்தகமும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த சில தினங்கள் முன்பு தான் மேற்கத்திய நாடுகளின் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதன் தாக்கத்தில் இருந்து மீள்வதற்குள் தற்போது அதானி குழுமத்தால் பங்குச் சந்தை சரிவை கண்டுவருகிறது. இது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.