விருதுநகர் மாவட்டத்தில் குட்கா மற்றும் போதைப் பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக எஸ்பி-யாக பொறுப்பேற்ற கண்ணன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்த பெரோஸ் கான் அப்துல்லா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு உதவி ஐஜி-யாக பணியாற்றி வந்த டி.கண்ணன் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்படி இன்று காலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும். குற்றங்கள் குறைக்கப்படும். அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
மேலும், போலீஸாருக்கும் அறிவுரைகளை வழங்கிய அவர், “போலீஸார் தங்களது காவல் பணியில் மிக கண்ணியத்துடன் நடந்து கொள்வது அவசியம். காவல் நிலையங்களில் பதிவாகும் கொலை, கொள்ளை, திருட்டு, போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
வழக்குகள் மீது உடனடியாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். உரிமம் இல்லாமல் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிப்பவர்களை கண்டறிய தனிக்குழு அமைத்து, வெடி விபத்துக்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும், சமூகத்தில் குற்றங்களில் எண்ணிக்கையை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார்.