யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கேத்கரை ஆகஸ்ட் 21 ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சதியை வெளிக்கொணர பூஜா கேத்கரை ஏன் காவலில் எடுக்க வேண்டும் என்பதற்கு பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறை மற்றும் யுபிஎஸ்சிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், “பூஜா கேத்கரை உடனடியாகக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை பார்த்தேன். என்ன குற்றம் நடந்ததோ அதில் இருந்து விசாரணை நீதிமன்றம் தடுமாறிவிட்டது. ஏன் ஜாமீன் வழங்க வேண்டும் அல்லது ஏன் வழங்கக்கூடாது என்பதற்கு பதில் இல்லை.
தற்போதைய நிலையில், அடுத்த விசாரணை தேதி (ஆகஸ்ட் 21) வரை மனுதாரரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கேத்கர், தனக்கு முன்ஜாமீன் மறுத்த மாவட்ட நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்துள்ளது.