புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பொன்பேத்தி ஊராட்சியில் உள்ளது பேரானூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரானூர் கிராமத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக பசுமை காடு ஒன்று இருந்து வந்ததாகவும் அதில் மான், முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வந்ததாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் தங்கள் வீடுகளை வளர்க்கும் ஆடு, மாடு, எருமைகளை அந்தக் காட்டில் மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். இப்படி இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அந்தக் காடுகளை அழித்து அதனை ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக தனி நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்து பட்டா மாறுதல் செய்யப்பட்ட நிலங்களை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்து அதில் சோலார் பேனல் அமைக்கும் பணியை தொடங்க அனுமதி அளித்துள்ளனர்.
அனுமதியைப் பெற்ற அந்த நிறுவனம் காடுகளை முழுமையாக அளித்து அதில் சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருவதால் தங்கள் கிராமத்தில் உள்ள வீட்டு வளர்ப்பு விலங்குகள் முதல் வனவிலங்குகள் வரை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தங்கள் கிராமத்திற்கு அடிப்படை தேவையான குடிநீர் வழங்கவில்லை என்றும் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர், கோட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் வரை பலமுறை புகார் மனுக்கள் அளித்துள்ளதாகவும் தாங்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறை கூறுகின்றனர்.
சுமார் 500 பேருக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த கிராமத்தில் அடிப்படை தேவையான குடிநீர் இல்லாத காரணத்தினால் வெகுண்டு எழுந்த கிராம மக்கள் இன்று காலை ஆவுடையார்கோவில் திருப்புனவாசல் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட மக்கள் நம்மிடம் தெரிவிக்கையில் திமுக ஆட்சி அமைந்த பிறகாவது தங்கள் கிராமத்திற்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்தும் அதனால் தாங்கள் அடைந்த துன்பங்கள் குறித்து விளக்கி பேசினர். தங்கள் கிராமத்திற்கு தேவையான இந்த அடிப்படை வசதிகளை திமுக அரசும் அதன் அதிகாரிகளும் நிறைவேற்றித் தரவில்லை என்றால் ரேஷன் கார்டு முதல் ஆதார் கார்டு வரை அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்துவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறி செல்வோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.