புதுச்சேரியில் 500 லிட்டர் சாராயம் பறிமுதல் : இருவரை கைது செய்தது கடலூர் போலீஸ்

புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சி குப்பத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500 லிட்டர் சாராயத்தை கடலூர் டிஎஸ்பி தலைமையான போலீஸார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.

கடலூர் முதுநகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீஸார், கடலூர் முதுநகர் அருகே உள்ள கொடிக்கால் குப்பம் பகுதியில் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் அங்கு 10 சாராய பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

போலீஸார் அவரிடம் நடத்திய மேல் விசாரணையில், இளங்கோவன் என்ற அந்த நபர் அந்த சாராய பாக்கெட்டுகளை புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சி குப்பத்தில் உள்ள ஒரு சாராயக்கடையில் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து கடலூர் டிஎஸ்பி-யான பிரபு தலைமையிலான போலீஸார் இளங்கோவன் கூறிய சாராயக்கடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாராயக் கடையில் சட்ட விரோதமாக ஏராளமான சாராய பாக்கெட்டுகளும், புதுச்சேரி மாநில அரசு சீல் இல்லாத சாராய பாட்டில்களும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளையும் நூற்றுக்கும் மேற்பட்ட சாராய பாட்டில்களையும் கடலூர் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் 500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சாராயம் விற்பனை செய்ததாக கொடிக்கால் குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவன் (49) என்பவரையும், ஆராய்ச்சி குப்பத்தில் சாராயம் விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த அருள்பிரகாஷ் (48) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.