புதுச்சேரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, “புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எந்த மருத்துவமனையும் ஏற்றுக் கொள்வதில்லை. மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில்கூட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டையை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து ரேஷன் கார்டுகளையும் உள்ளடக்கிய காப்பீடுத் திட்டம் அமல்படுத்தப்படுமா?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, “ஆயுஷ்மான் பாரத் திட்டம் புதுச்சேரிக்கு ஓரளவுதான் பயன்பட்டுள்ளது. இது முழுமையான திட்டமாக இல்லை. சில மாநிலங்களில் காப்பீடு திட்டம் தனியாக வைத்துள்ளனர். இத்திட்டத்தை மாற்றி முழுமையாக செயல்படுத்தவுள்ளோம். அதன்படி புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.” என்று சொன்னார்.