புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை : கர்நாடக அரசு 

புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக அம்மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய திட்டம் அமையவிருக்கிறது. இதுதொடர்பாக பேசிய கர்நாடக ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கே, “புதிய தொழில் தொடங்குவது என்பது ஆபத்தான முயற்சி. ஒருவர் நிலையான தனது வேலையை விட்டுவிட்டு புதிய முயற்சியில் ஈடுபடும்போது அது மிகவும் ஆபத்தாக இருக்கும். பல திறமையான நபர்கள் நிதி இல்லாத காரணத்தால் தொழில் தொடங்கத் தயங்குகின்றனர்.

எனவேதான், தங்கள் வேலையை விட்டுவிட்டு புதிய தொழில் தொடங்கவுள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதன் மூலம் நிதி சுமையை ஓரளவு குறைக்க முடியும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். அதன்படி, ஒரு வருடத்துக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

புதிய தொழில்முனைவோர் தங்கள் அன்றாட செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் வணிகங்களில் மட்டுமே கவனம் செலுத்த அரசு வழங்கும் தொகை உதவி புரியும். மாத உதவித்தொகை உரிய தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.