கார் பந்தயம் நடத்துவதற்காக மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுகிறது – உதயநிதிக்கு இபிஎஸ் கண்டனம்

மேட்டூர் : ஆக. 12, கார் பந்தயம் நடத்துவதற்காக மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டாக செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆலச்சாம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட 4 புதிய வகுப்பறை கட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் ரூ 72.85 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது, மாணவர்கள் எடப்பாடி பழனிசாமியை பார்த்து சந்தோஷம் அடைந்து, அவரிடம் கை குலுங்கி பேசினார்கள். பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “நான் முதன் முதலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது, ஆலச்சாம்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாக பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆலச்சாம்பாளையம் அதிமுகவின் கோட்டை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, வாழ்க்கை சீரழியும் நிலை உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதை பலமுறை தெரிவித்தும், சுட்டிக்காட்டியும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருள் விற்பனையை தடுக்க முடியாத திறமையற்ற பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் வீணாகி வருகிறது.

மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி, கார் பந்தயம் நடத்த திமுக அரசு தயாராகி வருகிறது. கார் பந்தயம் நடத்த இருங்காட்டுக் கோட்டையில் இடம் இருக்கும் போது, அதை விட்டு விட்டு மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெருக்கடியும் மிகுந்த சாலையில், மக்களின் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்த திமுக அரசு துடிக்கிறது. மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறார்கள். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. மக்களுடைய பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வதை ஏற்று கொள்ள முடியாது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. விசைத்தறி தொழில் நசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் அனைத்து தொழில்களும் நசிந்து விட்டன. மக்களின் பணத்தை, நலிவடைந்த தொழிலை சீர் செய்ய பயன்படுத்தாமல் தேவையின்றி வீணடிக்கிறார்கள். திமுக ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. அதிமுக ஆட்சியில் 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம் என மக்கள் பயன்பெறக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கிவிட்டார்கள்.

மக்களுக்கு பணி செய்ய தான் வாய்ப்பு தந்து இருக்கிறார்கள். முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களை தொடர்வது தான் நல்ல அரசாங்கமாக இருக்க முடியும். அதிமுக அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக ஆட்சியாளர்களுக்கு என்ன மனத்தடை இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி குப்பை வரி என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிமுக மீண்டும் மலருவதற்கு நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும். அதிமுக அரசாங்கம் மக்கள் அரசாங்கம். மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவது அதிமுக. அதிமுக இரு பெரும் தலைவர்கள் மறைவிற்கு பிறகு, அவர்களின் வழியில் பல்வேறு திட்டங்களை கொண்டு மக்களுக்கு நன்மை செய்து, இந்தியாவில் தமிழகம் உயர்ந்த இடத்திற்கு வந்தது அதிமுக-வால் தான். நாடளுமன்ற தேர்தலில், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 46,300 வாக்குகள் கூடுதலாக வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று இபிஎஸ் பேசினார். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.