நெல்லை மாநகராட்சியின் 7-வது மேயராக கோ.ராமகிருஷ்ணன் பதவியேற்பு

நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக திமுகவைச் சேர்ந்த கோ.ராமகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை மேயர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களும் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னதாக, சைக்கிளிலே மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த கோ.ராமகிருஷ்ணன் மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் திமுக சார்பில் 44 பேரும், திமுக கூட்டணி சார்பில் 7 பேரும் அதிமுக சார்பில் 4 பேரும் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில். கடந்த ஜூலை 3-ம் தேதி நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய மேயர் தேர்தல் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட 25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து, திமுகவிலிருந்து நீக்கப்பட்ட 6-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் தேர்தல் நடப்பது உறுதியானது.

இதையடுத்து நடந்த வாக்குப்பதிவில், கிட்டு என்ற ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனர். ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நெல்லை மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சுக புத்ரா மேயர் தேர்தலில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இன்று நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் கோ.ராமகிருஷ்ணன் நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுக புத்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் மேயருக்கான அங்கியினையும், செங்கோலையும் மேயரின் தாயார் மரகதம்மாளுடன் இணைந்து மாநகராட்சி ஆணையாளர் சுக புத்திரா வழங்கினார்.

கடந்த 1994-ம் ஆண்டு நெல்லை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயாராக திமுகவைச் சார்ந்த உமா மகேஸ்வரி தேர்வானார். அதனைத் தொடர்ந்து 2001 தேர்தலில் ஜெயராணி அதிமுக சார்பிலும் 2006-ம் ஆண்டு ஏ.எல்.சுப்பிரமணியன் திமுக சார்பிலும் மேயராக தேர்வானார்கள். தொடர்ந்து, 2011-ல் விஜிலா சத்யானந்த் அதிமுக சார்பிலும் 2014-ல் அதிமுகவைச் சேர்ந்த புவனேஸ்வரியும் மேயராக தேர்வானார்கள்.

தொடர்ந்து 2022-ல் திமுக சார்பில் சரவணன் மேயராக தேர்வானார். சொந்தக் கட்சிக் குழப்பங்கள் காரணமாக சரவணன் பதவி விலகியதால் அவரைத் தொடர்ந்து நெல்லையின் ஏழாவது மேயராக திமுகவைச் சார்ந்த கோ.ராமகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றுள்ளார். இவ்விழாவில் மாமன்ற உறுப்பினர்கள், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மாநகராட்சி உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராமகிருஷ்ணன் காலையில் தனது வீட்டில் இருந்து வழக்கமாக வரும் சைக்கிளில் புறப்பட்டு நெல்லை டவுனில் உள்ள விநாயகர் கோயில் மற்றும் நெல்லையப்பர் கோயிலில் சாமி கும்பிட்டு வழிபட்டார். அதன் பிறகு, நெல்லையப்பர் கோயிலில் உள்ள காந்திமதி யானைக்கு பழங்கள் வழங்கிவிட்டு சைக்கிளிலேயே மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார்.