புதுக்கோட்டை, மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்களது விருப்பத்திற்கிணங்க ஆங்கில மொழியில் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சி தொடங்கப்பட்டது.
காலை, மாலை மற்றும் விடுமுறை தினங்களில் ஆங்கில மொழியில் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சி வகுப்பானது பள்ளி முதல்வர் பெ.சிவப்பிரகாசம் தொடக்கி வைத்தார். மேலும் அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களது பள்ளிப் பருவத்தில் ஆங்கில மொழிப் புலமையை வளர்த்துக் கொள்வதற்காகவும், ஆங்கிலத்தில் சரளமாகப் பிறரிடம் பேசுவதற்காகவும் இப்பயிற்சி வகுப்பானது தொடங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் மாணவர்கள் தங்களது பள்ளி படிப்பினை முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் பொழுது அவர்கள் ஆங்கில வழியில் சிரமமின்றி கல்வி கற்க ஏதுவாகவும் இருக்கும் பொருட்டு இந்த வகுப்பானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கலைமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டுள்ள மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்திப் பேசினார். அவர் கூறுகையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாகக் கருதுவதாகவும் அதற்காகவே அவர்கள் தனியார் பள்ளியினை நாடுவதாகவும், அரசுப் பள்ளிகளில் இவ்வாறு தனிப் பயிற்சி அளிப்பதன் மூலம் பொதுமக்களது கவனத்தை ஈர்த்து மாணவர் சேர்க்கையை அதிகரித்து அரசுப் பள்ளியினை மேம்படுத்தலாம் என்றும், அதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ள பள்ளி முதல்வரையும், பயிற்சி ஆசிரியரையும் பாராட்டுவதாகவும் வாழ்த்திப் பேசினார். இறுதியாக பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியரும் பயிற்சியாளருமான பிரகாசம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.