குற்றாலத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விடுமுறை தினமான இன்று குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் சீசன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான இன்று கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், குற்றாலநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கடைகள் நடத்தும் வாடகைதாரர்கள், குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் குற்றாலத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் உணவகங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பொருட்கள் மற்றும் உணவு வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து குற்றாலம் வியாபாரிகள் சங்க தலைவர் காவையா, “குற்றாலத்தில் குற்றாலநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் 152 கடைகள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடைகளை குத்தகை உரிமம் பெற்றவர்கள் சொந்தமாக நடத்தி வருகின்றனர். சுமார் 50 கடைகளை குத்தகை உரிமம் பெற்றவர்களின் வாரிசுகள் நடத்தி வருகின்றனர். சுமார் 50 கடைகளை கூட்டாக ஒப்பந்தம் செய்த பங்குதாரர்களில் யாராவது ஒருவர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடைகளுக்கான வாடகை பாக்கியை முழுமையாக செலுத்திவிட்டு, கடைகளுக்கான சுவாதீன உரிமையை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி 80 கடைக்காரர்களுக்கு குற்றாலநாத சுவாமி கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். வாரிசுதாரர்களையும் வாடகைதாரர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். 2022-ல் இருந்து வாடகை நிர்ணயம் செய்யாமல் இருக்கும்போது 1.7.2022 முதல் 31.7.2024 வரை தன்னிச்சையாக வாடகையை சேர்த்து அதை வாடகை பாக்கியில் சேர்த்ததை ரத்து செய்ய வேண்டும்.
கொரோனா தொற்று காலத்தில் கடைகள் திறக்கப்படாததால் ஓரு வருட வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்டம் காரணமாக குற்றாலத்தில் உணவகங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கோடிக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்தகட்டமாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக இருக்கிறோம்” என்றார்.