மன்மோகன் சிங் ஆட்சியில் ஆண்டுக்கு 171 ஆக இருந்த ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை மோடி ஆட்சியில் 68 ஆக குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மக்களவையில் இன்று ஒப்புதல் பெறப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற விவாதத்துக்கு விளக்கமளித்த அஷ்வினி வைஷ்ணவ், “ரயில்வே துறைக்கு எதிராக காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது. ரயில்வேயை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுகிறது.
தானியங்கி ரயில் பாதுகாப்பு சிஸ்டத்தை பொருத்துவதன் மூலம் ரயில் விபத்துக்களைக் குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 1,711 ரயில் விபத்துகள் ஏற்பட்டன. இதன்படி சராசரியாக ஆண்டுக்கு 171 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 678 ரயில் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. சராசரியாக ஆண்டுக்கு 68 ரயில் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ரயில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு முன் எப்போதும் இல்லாத அளவு மோடி ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில் பாதுகாப்புக்காக மட்டும் ரூ. 70,273 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2.52 மடங்கு அதிகம். 2013-14 மற்றும் 2023-24 க்கு இடையே ரயில் முறிவுகள் 85% குறைந்துள்ளன.
நாங்கள் கடின உழைப்பை நம்புகிறோம். ரீல்ஸ்களை உருவாக்கவில்லை. மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முந்தைய 50 ஆண்டுகளில் 20,000 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 44,000 கிமீ மின்மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக 400 கோடி கிலோ புகை வெளியாவது குறைக்கப்பட்டுள்ளது. இது 16 கோடி மரங்களை நடுவதற்குச் சமம்” என தெரிவித்தார். முன்னதாக, காங்கிரசை அஷ்வினி வைஷ்ணவ் விமர்சித்தபோது, எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.