நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டப் பொருட்களான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பை பாக்கெட் மூலம் விநியோகிக்கும் திட்டம் சேலத்தில் இன்று தொடங்கப்பட்ட நிலையில், 234 தொகுதிகளிலும் தலா ஒரு கடைக்கு சோதனை அடிப்படையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் 36,954 நியாயவிலைக் கடைகள் மூலம் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவை இலவசமாகவும், சர்க்கரை, மண்ணெண்ணெய் மானிய விலையிலும், சிறப்புப் பொது விநியோகத்திட்ட பொருட்களான பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை மானிய விலையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இந்தப் பொருட்களில் பாமாயில் மட்டும் பாக்கெட்டில் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவை குடும்ப அட்டைதாரர்கள் கொண்டு வரும் பைகளில் மின்தராசு மூலம் எடையிடப்பட்டு வழங்கப்படுகிறது. இவ்வாறாக வழங்கப்படும் போது எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் பொது விநியோகத் திட்ட பொருட்களை பாக்கெட்டில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் முதல் கட்டமாக, சேலம் மாவட்டம் ஸ்ரீரங்கபாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த கடையில், தலா ஒரு கிலோ எடையில் துவரம் பருப்பு, சர்க்கரை அரை கிலோ முதல் பல்வேறு அளவுகளில் பிளாஸ்டிக் கவர்களிலும், அரிசி 10 கிலோ முதல் பிளாஸ்டிக் சாக்குப்பைகளிலும் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் வந்து கேட்கும் போது எடைக்கேற்ற பை எடுத்து தரப்படுகிறது.
முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு கடை தேர்வு செய்யப்பட்டு அந்தக் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் மற்ற கடைகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த கூட்டுறவு, உணவுத் துறைகள் முடிவெடுத்துள்ளன.
இது தொடர்பாக, நியாயவிலைக்கடை பணியாளர்கள் கூறும்போது, ‘‘தற்போது துறையின் சார்பில் பாக்கெட்களாக பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையே தொடர்ந்தால், எடை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவி்ப்பது தவிர்க்கப்படும். எங்களுக்கும் சிரமம் இருக்காது’’ என்றனர்.