நில மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீன் : கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கையெழுத்து

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டார்.

கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரின் பேரில், போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். கடந்த ஜூன் 12-ம் தேதி மனு விசாரணைக்கு வந்த நிலையில் விஜயபாஸ்கர் தலைமறைவானார்.

இதற்கிடையில் இவ்வழக்கு கடந்த ஜூன் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதாரர் சேகர், இவ்வழக்கில் நில பத்திரப்பதிவு செய்வதற்கு தொலைந்த ஆவணத்தை கண்டு பிடிக்கமுடியவில்லை என ‘நான்டிரேஷபிள்’ சான்றிதழ் வழங்கிய அப்போதைய வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி அளித்த புகார்கள் அடிப்படையில், வாங்கல் காவல் நிலையத்தில் ஜூன் 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், மோசடியான பத்திரப்பதிவு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு கடந்த ஜூன் 25ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால், தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் உடன் இருக்கவேண்டும் என இரு வழக்குகளிலும் முன் ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களையும் நீதிமன்றம் ஜூலை 6ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் ஜூலை 5, 7, 11-ம் தேதிகளில் விஜயபாஸ்கர் வீடு, நிறுவனங்கள், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை சிபிசிஐடி அலுவலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், ஜூலை 16-ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த பிரவீனும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விஜயபாஸ்கர் வாங்கல் ஸ்டேஷனில் பதிவான புகாரிலும் ஜூலை 17-ல் கைது செய்யப்பட்டார்.

ஜூலை 22ம் தேதி முதல், தலா இரண்டு நாட்கள் சிபிசிஐடி போலீஸாரும் வாங்கல் போலீஸாரும் விஜயபாஸ்கர், பிரவீனிடம் விசாரணை நடத்தினர். ஜூலை 26ம் தேதி மீண்டும் அவர்களை சிறையில் அடைத்தனர். இதனிடையே, வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டராக இருந்த பிருதிவிராஜ் ஜூலை 16-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிபிசிஐடி போலீஸார் கடந்த 25ம் தேதி முதல் இரண்டு நாட்கள் அவரிடமும் விசாரணை நடத்தினர்.

இவ்விரு வழக்குகளிலும் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகிய இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது ஜூலை 29-ம் தேதி விசாரணை தொடங்கியது. அதேபோல் சிபிசிஐடி வழக்கில் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. 2-வது நாளாக கடந்த செவ்வாய்கிழமை விசாரணை நடந்த நிலையில் இரவு 12.25 மணிக்கு நீதிபதி பரத்குமார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மறு உத்தரவு வரும் வரை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நீதிபதி தனது ஜாமீன் உத்தரவில், நீதிமன்றத்தில் மூவருக்கும் பிணைத் தொகையாக தலா ரூ.25,000 செலுத்தவேண்டும். விஜயபாஸ்கர் நாள்தோறும் கரூர் சிபிசிஐடி அலுவலத்தில் காலை 10 மணி, மாலை 5 மணி ஆகிய இரண்டு வேளையும், வாங்கல் காவல் நிலையத்தில் மதியம் 1 மணிக்கும் கையெழுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையிலிருந்து நேற்றிரவு கரூர் திரும்பிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை 10 மணிக்கு கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.