கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாம் நாளாக இன்று நடைபெறும் மீட்புப் பணியில் மாயமானோரை தேடுதல், உயிருடன் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ள நிலையில் கேரள முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
கேரள வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு இதுவென்பதால் நேற்றும், இன்றும் கேரள அரசு துக்கம் அனுசரிக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோர் வயநாட்டுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை கண்காணிக்கவுள்ளனர்.
வயநாட்டில் 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3000க்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 96569 38689, 80860 10833 ஆகிய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் உதவிக்காக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் தற்காலிக மரப்பாலம் அமைத்து ராணுவ மீட்புக் குழு முண்டக்கையை அடைந்துள்ளது. அங்கிருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 4 குழுக்களாகப் பிரிந்து 150 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 163 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் 143 உடல்களின் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. 190 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ’91 பேரது நிலை தெரியவில்லை’ என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தனியார் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பேசிய கேரள அமைச்சர் ராஜன்,“நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை” என்றார். நிலச்சரிவு ஏற்பட்ட காபி தோட்டங்களில் மேற்குவங்கம், அசாமைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் பணி புரிந்துவந்துள்ளனர். அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில், வயநாட்டில் நடைபெறும் மீட்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக சென்ற சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜின் கார் மலப்புரம் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவருக்கு மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக உள்ளூர் காவல் துறை தெரிவித்துள்ளது.
இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது.
பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்ததால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகளை மூடியது. டன் கணக்கிலான மண் சேறும் சகதியுமாக மூடியதில், அந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பை அடுத்து, 2வது நாளாக இன்றும் மீட்புப் பணிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் ஈடுபட கேரளாவில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் வந்தாலும் கூட நிபுணத்துவம், அனுபவம் நிறைந்தவர்கள் மட்டுமே மீட்புப் பணியில் அனுமதிக்கப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும், இன்று வானிலை முன்னேற்றம் இருந்தால் மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் ராணுவம் சார்பில் வயநாட்டை எளிதில் அடைய தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.