கேரளாவுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால் செய்யப்படும் : முதல்வர் ஸ்டாலின் பேட்டி

“வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், சென்னை கொளத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார்.

அப்போது, “வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். ‘இன்னும் கணக்கு எடுக்க முடியவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன். இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழுவும், நிவாரண நிதியாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. இன்னும் தேவை என்றால் உதவி வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து ராகுல் காந்தி மீது சாதிய ரீதியிலான தாக்குதல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அதுதொடர்பாக இப்போது கருத்துக்கூற முடியாது” என்றார். ஆளுநர் பதவி நீட்டிப்பு குறித்து கேள்விக்கு, “நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை” என்று கூறிவிட்டு முதல்வர் ஸ்டாலின் கிளம்பினார்.