கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 73 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி : “கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே மிகப்பெரிய நிலச்சரிவுகளில் விலைமதிப்பற்ற உயிர்கள் பரிதாபகரமாக இழந்தது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்,” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி : “நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இத்தகு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் : “கேரள மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 73 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன.மேலும், இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கேரள மாநில அரசையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை: “மண்சரிவுகளில் சிக்கியிருப்பவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ, தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் வேதானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், நீலகிரி மாவட்டத் தலைவர் மோகன்ராஜ், நீலகிரி மாவட்டப் பார்வையாளர் நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. வயநாடு மண்சரிவு மீட்புப் பணிகளிலும், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும், அவர்களுக்கான இதர உதவிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும்,” என்று கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்: “தமிழகத்தில் தொடங்கி குஜராத் வரை நீளும் 1.60 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கை நமக்கு கொடுத்த பெருங்கொடை ஆகும். அதை பாதுகாக்கத் தவறியதன் விளைவு தான் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகும். தமிழகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையை சூறையாடும் செயல்கள் தொடர்கின்றன. இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் தேவை குறித்து வயநாடு நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
சீமான்: “நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசும், மத்திய அரசும் விரைந்து மீட்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கேரளா மாநில அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு குருதி தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம். குருதி தேவைப்படின் மோகன்தாஸ் – 9344624697, கார்த்திக் – 9080126335, பழனி – 8903289969, தியாகராஜன் – 6382953434 என்று எண்களைத் தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவித்துள்ளார்.