மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்கள்) வாக்குகளை, வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கைச் சீட்டுகளுடன் (விவிபாட்) 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்ற மனுவை நிராகரித்து வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏப்ரல் 26 வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய எந்த காரணமும் இல்லை என்று கூறி மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது. “மறுஆய்வு மனுவையும், அதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கவனமாக ஆராய்ந்தோம். எங்கள் கருத்துப்படி, ஏப்ரல் 26, 2024 தேதியிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான எந்த காரணம் இல்லை. எனவே மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்கள்) வாக்குகளை, வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கைச் சீட்டுகளுடன் (விவிபாட்) 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்ற மனுவை நிராகரித்து வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி அருண் குமார் அகர்வால் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், ”“ஏப்ரல் 26ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் பல்வேறு தவறுகள் உள்ளன. விவிபேட் சீட்டுகளுடன் இவிஎம் வாக்குகளை 100% கணக்கிடுவதன் மூலம் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என்றும் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டதை விட இரண்டு மடங்கு பணியாளர்கள் கூடுதலாக தேவைப்படுவார்கள் என்றும் கூறுவது சரியல்ல. வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குகளை எண்ணும் போது தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் துல்லியமாகப் பதிவாகியுள்ளனவா என்பதைச் சரிபார்க்க அனுமதிப்பதில்லை. மேலும், வடிவமைப்பவர்கள், புரோகிராமர்கள், உற்பத்தியாளர்கள், பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றவர்களால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஏப்ரல் 26, 2024 தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
எனினும், மனுதாரரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அருண் குமார் அகர்வாலோடு, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.