வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஅமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேச்சு

சுற்றுச்சூழல் துறையின் சார்பில் வனப்பரப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினர்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்று வரும் 7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் காலநிலை மாற்றத் துறையை உருவாக்கி, பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கார்பன் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும் மரங்கள் தான் உதவுகின்றன. இதன்படி, 10 கோடி மரங்களை நடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தைலமரம் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவாது. அதேபோல அழகுச் செடிகளும் பயன்தராது. எனவே, மரக்கன்று நடவு செய்யும் போது நாட்டு மரக்கன்றுகளை, சுமார் 10 அடி உயரமுள்ள கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அவை தான் வெப்பச்சூழலைத் தாங்கி வளரும்.

தமிழ்நாட்டின் 1.30 லட்சம் சதுர கிமீ பரப்பளவில், 33 சதவிகிதம் 43 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவில் வனப்பரப்பு இருக்க வேண்டும். ஆனால், 31 ஆயிரம் சதுர கிமீ வனப்பரப்பு மட்டுமெ உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரம் சதுர கிமீ வனப்பரப்பு அதிகரித்திருக்கிறது. இன்னும் 12 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவு வனப்பரப்பையை உருவாக்க வேண்டும்.

அதேபோல பனைமரத்தை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். நாட்டிலுள்ள 10 கோடி பனை மரங்களில், 5 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. கஜா புயலின்போது ஒரு பனை மரம் கூட விழவில்லை. இதுவரை வீரிய ரகம் கண்டுபிடிக்கப்படாத ஒரே மரம் பனை மட்டுமே.

ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு பக்கங்கள் இருக்கும். அந்தப் பக்கங்களை முழுமையாக அறிந்து கொள்ள நூல்கள் நமக்கு உதவும். மிகச்சிறந்த முறையில் இந்தப் புத்தகத் திருவிழாவை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகத்தோடு ஒருங்கிணைத்து நடத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


இசைத் துறையில் மழையூர் சதாசிவம், ஓவியத்துறையில் ராஜப்பா, ஐயப்பா, நாட்டுப்புறக் கலையில் கிடாக்குழி மாரியம்மாள், தொல்லியல் துறையில் ஆ. மணிகண்டன், கைவினைக் கலையில் மெ. ரெங்கசாமி, விவசாயத்தில் மா. முத்துலட்சுமி ஆகிய புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் பாராட்டினார். மேலும், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் அமைச்சர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

விழாவிற்கு ஸ்ரீபாரதி மகளிர் கல்விக்குழுமத் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் மு.முத்துக்குமார் வரவேற்க, புதுக்கை புதல்வன் நன்றி கூறினார். நிகழ்சிகளை கவிஞர் ஜீவி தொகுத்து வழங்கினார்.