புதுச்சேரியில் பல துறைகளில் நடக்கும் ஊழல் தொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு தரவுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அதே நேரத்தில் பாஜக கூட்டணியிலுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் புறக்கணித்தார். அதற்கு என்ன காரணம் என்றே தெரியாது. நிதி ஆயோக் கூட்டத்தில் தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிதி, மாநில அந்தஸ்து, சிறப்பு நிதி ஆகியவற்றை கேட்டுப் பெற முடியும். இந்தக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டில் தங்கள் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்துப் புறக்கணித்தன.
ஆனால், புதுவை முதல்வர் இந்தக் கூட்டத்துக்குச் செல்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும், கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இதன் மூலம் புதுவை மக்கள் மீது அவருக்கு அக்கறையில்லை என்பது தெளிவாகிறது. ஏற்கெனவே முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக, சுயேச்சை எம்எல்ஏ-க்கள் 7 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி ஆட்சி 2026 வரை நீடிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. எங்களைப் பொறுத்தவரை என்ஆர்.காங்கிரஸ் – பாஜக மோதலை வேடிக்கைதான் பார்க்கிறோம். இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். எங்கள் கட்சியை பலப்படுத்தி 2026-ல் ஆட்சியை பிடிப்பதுதான் எங்கள் நோக்கம். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்ததன் மூலம் முதல்வர் ரங்கசாமி தனது ஜனநாயகக் கடமையைச் செய்ய தவறிவிட்டார்.
புதுவை அமைச்சரவை விநோதமான அமைச்சரவையாக திகழ்கிறது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு அமைச்சர் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொகுதி பிரச்சினையாக இருந்தாலும், அதிகாரிகளை அழைத்து பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். அதைவிடுத்து வழக்கு தொடர்ந்ததன் மூலம் முதல்வர் கட்டுப்பாட்டில்தான் அமைச்சரவை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. வழக்கு தொடர்ந்த அமைச்சரை முதல்வர் நீக்க வேண்டும். மேலே இருப்பவர்கள் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்த ஆட்சியும் நடப்பதால் தான் ரங்கசாமியை டம்மி முதல்வர் எனக் கூறுகிறோம்.
காரைக்காலில் நகர அமைப்பு குழுமம் அனுமதி பெற்றது போல போலி ஆவணம் தயாரித்து 31 மனை பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மோசடிக்காரர்கள் கியூஆர் கோடு உருவாக்கி இதை செய்துள்ளனர். இந்தத் தகவல் வெளியான பிறகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் தந்து நடவடிக்கை எடுக்க கோரவுள்ளோம்.
ஊழல், முறைகேடுகளுக்கு புதுச்சேரி அரசு துணை செல்கிறது. புதுவை மின்துறையை அதானி கையில் எடுக்க உள்ளார். அவர் ஏற்கெனவே காரைக்கால் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். வெளி மாநிலங்களில் நடந்து வந்த அதானி அட்டூழியம் புதுவையில் அரங்கேறத் தொடங்கியுள்ளது. புதுவை அமைச்சர் நமச்சிவாயம் குஜராத் சென்று அதானியைச் சந்தித்துள்ளார். அதன் பிறகு தான் புதுவை அரசு மின்துறையை அதானிக்கு தாரைவார்க்க கையெழுத்திட்டுள்ளனர். இந்த விஷயத்தில் முதல்வரை மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளதாக தெரிகிறது.
கடந்த 10 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் புதுவைக்கு ஒரு ரயில்கூட விடவில்லை. புதுச்சேரி அரசில் நடைபெற்று வரும் ஊழல்கள் தொடர்பாக விரைவில் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மனு தரவுள்ளோம்” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.